திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி

உலக இதய தினத்தையொட்டி திண்டுக்கல்லில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
மினி மாரத்தான் போட்டி
இந்திய மருத்துவ சங்கத்தின் திண்டுக்கல் கிளை, திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் உலக இதய தினத்தையொட்டி நேற்று மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி திண்டுக்கல்லில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 1,950 ஆண்கள், 650 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 600 பேர் பங்கேற்றனர். போட்டியில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வழித்தடம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி ஆண்களுக்கு திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளியில் இருந்து நாகல்நகர், அங்குவிலாஸ் இறக்கம், ஜே.சி.பி. மருத்துவமனை, தாடிக்கொம்பு ரோடு, அஞ்சலி ரவுண்டானா வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும், பெண்களுக்கு ஆர்த்தி தியேட்டர் சாலை, ஆர்.எம்.காலனி, அஞ்சலி ரவுண்டானா வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கம் வரையிலும் என தனித்தனியாக வழித்தடம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் இருதரப்பு போட்டியாளர்களும் பங்கேற்று ஓடினர்.
ரூ.15 ஆயிரம் பரிசு
பின்னர் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதன்படி, ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த ராஜபாளையத்தை சேர்ந்த மாரிசரத்துக்கு ரூ.15 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த ஊட்டியை சேர்ந்த நிகில் குமாருக்கு ரூ.10 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த ஊட்டியை சேர்ந்த சிஜூவுக்கு ரூ.7 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியை சேர்ந்த சமயாஸ்ரீக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த துாத்துக்குடியை சேர்ந்த ஜெயபாரதிக்கு ரூ.7 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யாவுக்கு ரூ.5 ஆயிரமும், 4-ம் இடம் பிடித்த திண்டுக்கல் புனித லூர்து அன்ைன பள்ளி மாணவி ஜோன் ஷாலினிக்கு ரூ.3 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 5 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 பரிசாக வழங்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு
முன்னதாக போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி முன்பு நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்துகொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வீரமணி, மாவட்ட வன அலுவலர் பிரபு, விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, எம்.எஸ்.பி. பள்ளி தாளாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய மருத்துவ சங்க திண்டுக்கல் கிளை தலைவர் டாக்டர் மகாலட்சுமி, செயலர் ஜோசப் கிறிஸ்டோபர் பாபு, திண்டுக்கல் தடகள சங்க தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் துரைராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.






