மகளிர் சுய உதவிகுழுவினர் 60 பேருக்கு ரூ.48 லட்சம் கடன்
தளி பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவிர் 60 பேருக்கு ரூ.48 லட்சத்து 13 ஆயிரத்தில் கடன் உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி பேரூராட்சியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு ரூ.2 கோடியே 17 லட்சத்தில் திட்டபணிகளை தொடங்கி வைத்தும் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைத்தார்.
அதே போன்று உடுமலை அடுத்த பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் ரூ.47 லட்சத்தில் கூட்டுறவு எண்ணெய் ஆலை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
60 பேருக்கு கடன் உதவி
அதைத் தொடர்ந்து 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 லட்சத்தில் கடன் உதவியும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.50 ஆயிரத்தில் கடன் உதவியும், 29 பேருக்கு ரூ.34 லட்சத்து13 ஆயிரத்தில் கே.சி.சி பயிர்க் கடன் உதவியையும், 6 பேருக்கு ரூ5 லட்சத்து 50 ஆயிரத்தில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகள் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 13 ஆயிரத்தில் கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர், ஜெயராமகிருஷ்ணன், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, செந்தில்குமார், செழியன், திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், பி.ஏ.பி. பாசன தலைவர் மொடக்குப்பட்டி ரவி, தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.