தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் கவனம் செலுத்துங்கள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா


தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் கவனம் செலுத்துங்கள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
x

தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் கவனம் செலுத்துங்கள் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

திருப்பூர்

தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் கவனம் செலுத்துங்கள் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

3 அமைச்சர்கள்

திருப்பூர் கொங்குநகர் அப்பாச்சிநகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். புதிய கட்டிடத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

திராவிட நாயகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலில் வந்தது கொங்கு மண்டலத்துக்குத்தான். கொங்கு மண்டலத்தில் நடக்கும் முன்னெடுப்புகளை மிக கூர்மையாக முதல்-அமைச்சர் கவனித்து வருகிறார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள் நிலத்தை கொடுத்தால் தொழிற்பேட்டைகள் அமைக்க வசதியாக அமையும். தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி காத்திருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. வருகிற ஜனவரி மாதம் முதல் 2 வாரங்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. நம் பிள்ளைகளுக்கு அதிக ஊதியம் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் அமர்ந்தும் வேலைவாய்ப்புகள் ஈர்க்கும் மாநாடாக இது அமையும்.

தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்பு

இந்தியா வளர்ந்து வருகிறது. வெளிநாட்டினர் வந்தால் அவர்கள் முதலில் கதவை தட்டுவது தமிழ்நாட்டைத்தான். எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் முன்னேற்றத்துக்கான ஆட்சியாகவே தமிழகம் இருந்து வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முதலீட்டாளர்களை தொடர்ந்து தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டை பொருத்தவரை ஜவுளித்தொழில், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கி வருகிறோம். ஜவுளித்தொழிலில் தொடர்ந்து முதன்மையாக இருக்கவும், அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கு டெக்னிக்கல் டெக்ஸ்டைல் அதாவது தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நல்ல வளர்ச்சி

தொழில்நுட்ப ஜவுளித்துறைக்குள் 12 பிரிவுகள் உள்ளன. அதில் ஆட்டோமொபைல் சார்ந்த தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி, மருத்துவ தொழில்நுட்ப ஜவுளி, விளையாட்டு வீரர்களுக்கான ஆடை உற்பத்தி, வேளாண் தொழில்நுட்ப ஜவுளி துறைகள் வரும் ஆண்டில் நல்ல வளர்ச்சியை நோக்கி செல்ல இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆடைத்தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமிழக முதல்-அமைச்சரும் இதை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளார். நிலம் வழங்கினால் தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க தயாராக உள்ளோம். முதல்-அமைச்சரின் ஆதரவு திருப்பூருக்கு எப்போதும் நிச்சயம் உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர், மேயர்

முடிவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன் நன்றி கூறினார். இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், தம்பி கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்கள் இளங்கோவன், ராஜ்குமார் ராமசாமி, இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார் துரைசாமி, செயற்குழு உறுப்பினர் அட்லஸ் லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழில் அமைப்பினர், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story