தமிழகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில்குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடுராசிபுரத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
ராசிபுரம்:
தமிழகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.854 கோடியே 37 லட்சத்தில் ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ராசிபுரம் நகராட்சி கோனேரிப்பட்டியில் நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து வரவேற்றார். மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து விளக்கி பேசினார். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், பேரூராட்சி தலைவர்கள் ராஜேஷ், லோகாம்பாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர்கள் கே.என்.நேரு, மதிவேந்தன் ஆகியோர் 544 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:- ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டமானது இன்னும் ஒரு ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். வீரபாண்டி ஏரியை ரூ.100 கோடியில் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.10 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
ஆனால் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2½ ஆண்டுகளில் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தை இணைத்து இந்த பணிகளை செய்து வருகிறோம். கூடுதலாக ஒரு ஆண்டில் மேலும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு திட்டம் தீட்டி வருகிறோம். ஏற்கனவே விடுபட்டுள்ள பகுதிகளை இணைத்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.மேலும் பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்றும் பணியும், ஆங்காங்கே மறு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து நீர் ஆதாரங்களை பெருக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் சேலம் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, அயலக அணி மாநில துணை செயலாளர் முத்துவேல், ராசிபுரம் தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் விஸ்வநாத், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் மதியழகன் நன்றி கூறினார்.