தமிழகத்தில்மேலும் சில மாவட்டங்களில் சிறுதானியம் வினியோகம் செய்ய திட்டம்அமைச்சர் அர.சக்கரபாணி பேட்டி


தமிழகத்தில்மேலும் சில மாவட்டங்களில் சிறுதானியம் வினியோகம் செய்ய திட்டம்அமைச்சர் அர.சக்கரபாணி பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2023 7:00 PM GMT (Updated: 16 Oct 2023 7:00 PM GMT)

தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியம் வினியோகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

நாமக்கல்

தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியம் வினியோகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

சிறுதானியம்

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தற்போது அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வழங்கப்பட்டு வருகிறது. வருகிற ஆண்டுகளில் மேலும் சில மாவட்டங்களில் சிறுதானியம் வழங்கும் திட்டத்தை விரிவுப்படுத்த இருக்கிறோம். எனவே அந்தந்த மாவட்டங்களில் விளையும் சிறுதானியங்கள் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் புள்ளிவிவரம் கேட்டு உள்ளோம். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று சிறுதானியங்களை கொள்முதல் செய்து, ரேஷன் கடை மூலம் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் பொறுப்பேற்றபோது, 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டன. ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் நடைமுறை மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் மேம்படுத்தப்பட்டு, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 36 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

குடோன் அமைக்க நடவடிக்கை

அதேபோல் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு வருபவர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலையில் அவர்களின் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் அவர்களுக்கான பொருட்கள் பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 3.50 லட்சம் நபர்கள் பயன்பெற்று உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்கள் உள்ளன. இவற்றில் 5 தாலுகாவில் நுகர்பொருள் வாணிப கழக குடோன் உள்ளன. மீதமுள்ள 3 தாலுகாவில் குடோன் அமைக்க இடம் தேர்வு செய்யசொல்லி உள்ளோம். இடம் தேர்வு செய்த பின்பு குடோன் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story