ஈரோட்டில் ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு கூட்டம்- அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்தது

ஈரோட்டில் ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு கூட்டம்- அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்தது
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் பி.அமுதா, மகளிர் திட்ட மேலாண்மை இயக்குனர் பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மகளிர் திட்டத்தின் சார்பில் 15 பேருக்கு நேரடி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவியினையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் நிதி உதவியினையும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பையும், பாரத பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டிற்கான ஆணையையும், 2 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும், குடிநீர் இணைப்பில் தன்னிறைவு நிலையை பெற்ற பேரோடு, கூத்தம்பூண்டி, கணக்கம் பாளையம், புள்ளப்பநாயக்கன் பாளையம், முடுக்கன்துறை ஆகிய 5 கிராம ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பாராட்டு மடல்களையும் அமைச்சர் வழங்கினார்.
இதில் எம்.பி.க்கள் ப.செல்வராஜ், அ.கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சி.சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.






