புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை புகுத்த முயற்சிஅமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை புகுத்த முயற்சி நடைபெறுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டினார்.
கவிஞர் சிலை திறப்பு
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் நேற்று கவிஞரின் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரி கடந்த 1969-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்டது. 1981-ம் ஆண்டு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது.
உதவித்தொகை
தற்போது இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் கல்லூரிக்கு செல்லும்போது அவர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிப்பது இல்லை. ஆனால் பெண்களுக்கு மாதந்தோறும், ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
காமராஜர் காலத்தில் ஆரம்பக்கல்வி வளர்ந்தது. கல்லூரிகளை அதிகம் திறந்தவர் கருணாநிதி. அந்த பள்ளி, கல்லூரிகளில் கல்வி வளர்ச்சி பெற வேண்டும். எண்ணிக்கை மட்டும் இருந்தால் போதாது. அவர்களது திறமையையும் வளர்க்க வேண்டும் என்று தான், `நான் முதல்வன்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய கல்வி கொள்கை
தற்போது புதிய கல்வி கொள்கை என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆன்லைனின் பாடம் சொல்லி கொடுக்கலாம் என்கின்றனர். கொரோனா காலத்தில் ஆன்லைனில் படித்தோம். இப்போது படிக்க முடியுமா?
இருமொழி கொள்கை என்பது தமிழும், ஆங்கிலமும் படித்தால் போதும். ஆனால் புதிய கல்வி கொள்கையில் இன்னொரு மொழி கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று சொல்லி, இந்தியை புகுத்துகிற நிலை வந்திருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு என்று ஒரு கல்வி கொள்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை நியமித்திருக்கிறார். தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 53 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.50 லட்சம் நிதி
முன்னதாக பேசிய ராஜேஸ்குமார் எம்.பி. இந்த கல்லூரியில் கலையரங்கம் கட்டுவதற்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கி தருவேன் என உறுதி அளித்தார்.






