நாமக்கல் மாவட்டத்தில்மத்திய இணை மந்திரி எல்.முருகன் சுற்றுப்பயணம்பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்


நாமக்கல் மாவட்டத்தில்மத்திய இணை மந்திரி எல்.முருகன் சுற்றுப்பயணம்பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்
x
தினத்தந்தி 13 March 2023 12:30 AM IST (Updated: 13 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மத்திய தகவல் ஒளிபரப்பு, கால்நடை மற்றும் மீன் வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று நாமக்கல் வந்தார். பயணியர் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அப்போது நாமக்கல் ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், இணை மந்திரியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் நாமக்கல் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். இதை தொடர்ந்து பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற பகுதியில் புறவழிச்சாலை செல்வதால் பொதுமக்கள் நீதிமன்றத்துக்கு செல்வது சிரமமாக உள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் நீதிமன்றம் பகுதியில் நெடுஞ்சாலையில் அணுகுசாலை வசதியுடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என பரமத்தி வக்கீல்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

அதை தொடர்ந்து நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறப்பு விழா கண்ட பா.ஜனதா மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு சென்ற இணை மந்திரி குத்துவிளக்கு ஏற்றி அங்கு வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது அவர் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களில் பொதுமக்கள் பயன்பெறுவதற்கு பா.ஜனதாவினர் வழிகாட்ட வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து கே.புதுப்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலான பாமா- ருக்மணி சமேத நந்தகோபால சாமி கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு நிறைவுற்றதை தொடர்ந்து வருஷாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஸ்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story