அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதத்தில் தொடங்கி வைப்பார்; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதத்தில் தொடங்கி வைப்பார்; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதத்தில் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதத்தில் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஆய்வு கூட்டம்

தமிழக முதல்-அமைச்சரின் தொலைநோக்கு மற்றும் சிறப்பு திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட தொலைநோக்கு மற்றும் சிறப்பு திட்ட பணிகளின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், உங்கள் தொகுதியில் முதல் -அமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் கூடுதல் கலெக்டர் நாரணவ்ரே மனிஷ் ஷங்கர்ராவ், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சோதனை ஓட்டம்

இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அத்திக்கடவு -அவினாசி திட்ட பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சில இடங்களில் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதால், சில குளங்களுடன் இணைக்கும் இணைப்பு குழாய்களில் கசிவுகள் காணப்பட்டன. 6-வது நீர் உந்து நிலையம் அருகில் 200 மீட்டர் தூரம் வரை குழாய்கள் அமைப்பது தொடர்பாக ஒருவர் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் அந்த இடத்தில் இன்னும் குழாய்கள் பதிக்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1,045 குளம், குட்டைகள் நீர் பெற உள்ளன. 15 குளங்கள் மட்டும் சிவில் வழக்கு மூலம் பாதிக்கப்படும். எனவே ஒட்டுமொத்த திட்டமும் வழக்கால் பாதிக்கப்படாது. தற்போது 4 உந்து நிலையங்களில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. மீதமுள்ள 2 நீர் உந்து நிலையங்களில் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெறும்.

ஒரு மாதத்தில்...

எனினும் 20 நாட்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். எனவே, ஒரு மாதத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். பின்னர், திட்டத்தில் விடுபட்ட குளங்களை சேர்க்க தனி திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசன முறையில் விவசாயிகளை சேர்க்கும் ஆலோசனை பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.


Next Story