சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு


சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிமெண்டு சாலை அமைக்கும் பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது.

அதன்படி முதற்கட்டமாக பே கோபுரம் பகுதி மற்றும் பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.15 கோடி மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக அந்த பகுதிகளில் பக்க கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் திருவூடல் தெரு- பேகோபுரத் தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரையில் கடந்த 7-ந் தேதி முதல் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதற்காக அங்கு சாலை அமைப்பதற்காக பள்ளம் எடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

இந்த நிலையில் இன்று சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளின் விவரம் குறித்து கலெக்டர் மற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழக முதல்- அமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த சிமெண்டு சாலை பணியானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

மழை காலங்களில் சாலைகளில் வழிந்து ஓடும் தண்ணீர் பேகோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்று கலப்பதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது ஆன்மிகமக்கள் மத்தியில் கோவில் உள்ளே செல்லும் கழிவுநீரை தடுக்க வேண்டும், மழைநீரை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்தது

அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது இந்த சிமெண்டு சாலையானது பேகோபுரம் வழியாக கழிவுநீர் உள்ளிட்ட எந்த வகையான நீரும் கோவிலுக்குள் செல்லாத வகையில் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

வருகிற தீபத் திருவிழாவிற்குள்

இந்த பணிகள் அனைத்தும் வருகிற தீபத் திருவிழாவிற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால் இந்த பணியானது இரவு பகலாக நடைபெற உள்ளது.

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் எந்தெந்த பணி நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலை துறை, மின்சார துறை, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டாக ஆய்வு கூட்டம் நடத்தி பணியை விரைவுப்படுத்த உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, வசந்தம் கார்த்திகேயன், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஸ்ரீதரன், நெடுங்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் ஜோதி, நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கார்த்திக்வேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story