மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு


மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு
x

மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கடம்பூர் பகுதியில் 137.65 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி இருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்புகளை வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து அகற்றி ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கடம்பூர் கிராமத்தில் தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தினார்.

பின்னர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வனத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் முத்தான திட்டத்தில் ஒன்றான தாவரவியல் பூங்கா திட்டம் மிக முக்கியமான ஒன்று. எனவே தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தேன்.

இங்கு 137.65 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச தரத்தில் தாவரவியல் பூங்கா அமைக்க லண்டன் கியூவில் உள்ள தாவரவியல் பூங்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்தியாவிலே இது போன்ற தாவரவியல் பூங்கா இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமான அளவில் இந்த பூங்காவை அமைக்க உள்ளோம், பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு தாவரங்கள், பூக்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா அமைந்தவுடன் கடம்பூர் கிராமத்தை சுற்றி உள்ள பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சுற்றுலா பயணிகளுக்கு இது மிக பெரிய சுற்றுலா தலமாக அமையும்.

அளவில் இந்த பூங்காவிற்குள் உள்ளே நுழையும் சுற்றுலா பயணிகள் இங்கு இருக்கும் தாவரங்கள், பூக்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் அளவுக்கு பயனுள்ள சுற்றுலா தலமாக இது அமையும் இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சருடன் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story