மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்படும் கடலூரில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் விரைவுபடுத்தப்படும் என கடலூரில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
புதிய திட்டப்பணிகள்
அப்போது எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் தொகுதிக்குட்பட்ட நகர பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து தெரிவித்தனர். மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான புதிய திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள பணிகளின் நிலை குறித்தும், பணிகளை விரைவுபடுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும், பணிகளின் தாமதத்திற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதனை விரைவுபடுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அடிப்படை தேவைகள்
பின்னர் அவர், முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலுடன் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு, மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில் ரமேஷ் எம்.பி., கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் நவேந்திரன், என்ஜினீயா் மகாதேவன், மண்டல தலைவா் இளையராஜா, சங்கீதா செந்தில் முருகன், சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகரசபை தலைவர் செந்தில்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.