அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு


அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு
x

பூந்தமல்லி அருகே அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்

விடுதியில் அமைச்சர் ஆய்வு

திருமழிசை அடுத்த மேல்மணமேடு பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் இருந்தனர்.அப்போது விடுதியில் தங்கி பயலும் மாணவர்களுக்காக காலை மற்றும் மதிய உணவுகள் பாத்திரங்களில் தயாராக இருந்தன. அதனை அமைச்சர் சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் எப்படி உள்ளது என்பதை குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் மாணவர்களுக்கு சமையலுக்கு வேண்டிய மளிகை பொருட்கள் இருக்கும் அறையை திறந்து பார்க்கும் போது அங்கு குறைந்த அளவு மளிகை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வருகை பதிவேடு

மாணவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு மாணவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் அவர்கள் பயன்படுத்தும் துணிகள் மட்டும் துவைத்து காய வைக்கப்பட்டிருந்தது.பின்னர் நூலகத்திற்குள் சென்று பார்த்த போது, அங்கு ஒரு புத்தகம் கூட இல்லாமல் காலியாக இருந்தது. மாணவர்கள் எங்கே என அமைச்சர் கேட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று உள்ளார்கள் மேலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுவார்கள் என அங்கிருந்த ஊழியர்கள் அமைச்சரிடம் கூறினர். பின்னர் அங்கிருந்த மாணவர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்தபோது அதில் 66 மாணவர்கள் இங்கு தங்கி இருப்பதாகவும் அவர்களுக்கு தினமும் வேண்டிய உணவுகள் தயார் செய்து கொடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

பெற்றோரிடம் தொடர்பு

இதையடுத்து அமைச்சர் கயல்விழி, பராமரிக்கப்பட்டு வந்த வருகைப்பதிவேட்டில் உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசிய பெற்றோர் தனது மகன் தனியார் பள்ளியில் படிப்பதாகவும் அருகிலேயே வீடு இருப்பதால் விடுதியில் சேரவில்லை என கூறினார்.

பின் எதற்காக விடுதியில் சேர விண்ணப்பித்துள்ளீர்கள் என கேட்ட நிலையில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை எல்லாம் கண்ட அமைச்சர் அங்கிருந்த நோட்டு புத்தகத்தில் விடுதியை ஆய்வு செய்தததில், உணவின் தரம் நன்றாக இருந்ததாகவும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் பதிவேட்டில்ஆய்வு குறித்து எழுதி வைத்துவிட்டு அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

'ஆளே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ' ஆத்துற என நடிகர் விவேக் ஒரு படத்தில் நகைச்சுவையாக கூறுவார் அந்த காட்சிக்கு ஏற்ப பூந்தமல்லி அருகே மாணவர்களே இல்லாத அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் 66 மாணவர்கள் தங்கி இருப்பதாக இருந்த வருகைப்பதிவேடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story