சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.75 லட்சத்தில் கட்டண படுக்கைகள் வசதி பிரிவு-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.75 லட்சத்தில் கட்டண படுக்கைகள் வசதி பிரிவு-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
x

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.75 லட்சம் மதிப்பில் கட்டண படுக்கைகள் வசதி பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சேலம்

கட்டண படுக்கை பிரிவு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிதாக 10 கட்டண படுக்கைகள் வசதி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கட்டண படுக்கைகள் வசதி பிரிவை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவர் அங்கு நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் உள்ளது? என்பது குறித்து பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.2 ஆயிரம் கட்டணம்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையை தொடர்ந்து சேலம், மதுரை, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டண படுக்கை பிரிவு தொடங்கப்படும் என்று 2022-2023-ம் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ சேவையை ஒட்டு மொத்த மக்களும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் முதல்கட்டமாக இந்த கட்டண படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 2 டீலக்ஸ் அறைகள், 8 ஏ.சி. அறைகள் என மொத்தம் 10 கட்டண படுக்கைகள் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறையில் குளிர்சாதன வசதி (ஏ.சி), ஐ.சி.யு. உபகரணங்கள், டி.வி., தனி கழிவறை, வாட்டர் ஹீட்டர், உதவியாளர் வசதி என பல்வேறு வசதிகள் தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் கூடுதலான வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டீலக்ஸ் (சொகுசு) அறைக்கு ரூ.2,000-ம், ஏ.சி.அறைகளுக்கு ரூ.1,200-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சேவையின் மூலம் பொதுமக்கள் அதிகம் பயன்பெறுவார்கள். சேலத்தை தொடர்ந்து வரும் நாட்களில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16 கட்டண மருத்துவ படுக்கைகளும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 கட்டண மருத்துவப்படுக்கைகளும் திறந்து வைக்கப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

குடற்புழு நீக்க மாத்திரை

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் மணி, துணை மேயர் சாரதா தேவி, மண்டலக்குழு தலைவர் உமாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி சேலம் தொங்கும் பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

2.69 கோடி பேர்

தேசிய குடற்புழு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 46 ஆயிரத்து 138 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், 12 ஆயிரத்து 201 தனியார் பள்ளிகள், 2 ஆயிரத்து 109 கல்லூரிகள், 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள், 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள் உள்பட ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 600 இடங்களில் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த பணிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 550 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் மாணவர்களுக்கு ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை நீக்கப்பட்டு நோய் எதிர்ப்பு திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

மருத்துவ சேவை

அரசு டாக்டர்கள் பணி நேரத்தில் வெளியில் பணி செய்வது தொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், அரசு டாக்டர்களை குறைத்து மதிப்பீடு செய்யமுடியாது. அவர்களது மருத்துவ சேவை பாராட்டும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் 4,308 டாக்டர்கள், 4 ஆயிரம் நர்சுகளை நியமிக்கும் பணி நடந்து வருகிறது, இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.


Next Story