அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு


அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
x

குளச்சல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவமனையில் ரத்த வங்கி அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் ஆய்வு

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு நடத்தினார். மருத்துவமனையின் மருந்து கிடங்கு, பிரசவத்திற்குப்பின் தாய்-சேய் கவனிப்பு வார்டு, பிணவறை ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து டாக்டர்களிடம் மருத்துவமனையின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், 'மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையை மேம்படுத்தும் வகையில் நவீன வசதியை தொடங்க வேண்டும். விபத்து மற்றும் அவசர சிகிச்சையை மேம்படுத்த வேண்டும். ரத்த வங்கி வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும். உடற்கூறு பிரிவை தொடங்க வேண்டும். பச்சிளம் குழந்தை சிறப்பு பிரிவு தொடங்க வேண்டும். புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மையம் தொடங்க வேண்டும்' என கோரிக்கை மனு அளித்தார்.

இரவு நேர டாக்டர்

இதுபோல் குளச்சல் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நகர வியாபாரிகள் சங்கம், நகர முஸ்லிம் முன்னணி கழகம் ஆகியவை சார்பில் நிர்வாகிகள் 'குளச்சல் மருத்துவமனையில் இரவு நேர டாக்டர் நியமிக்க வேண்டும். ஏ.வி.எம். கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.

பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவனையில் ரத்த வங்கி வசதி, கூடுதல் அறைகள், பிணவறையில் குளிர்ப்பதன பெட்டி வசதி ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ரஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட சுகாதார இணை இயக்குனர் பிரகலாதன், குளச்சல் மருத்துவ அலுவலர் அமுதா, குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், நகர செயலாளர் நாகூர் கான், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story