ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் குறித்து நேரில் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்கள் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் சரிவர கிடைக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
ஆஸ்பத்திரியில் உள்ள மருந்தகங்கள், தீவிர சிகிச்சை மருத்துவ பிரிவு, தீவிர சிகிச்சை நச்சுயியல் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவு, கட்டண வார்டுகள், அவசர விபத்து சிகிச்சை பிரிவு, எழும்பு முறிவு பிரிவு ஆகியவற்றில் 1 மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த டாக்டர்களை, நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் சரிவர வழங்குமாறும், மருந்துகள் எந்தவித குறையுமின்றி சரிவர கிடைக்க செய்யுமாறும் அறிவுறுத்தினார்.