நவீன எந்திரம் மூலம் அயோடின் உப்பு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


நவீன எந்திரம் மூலம் அயோடின் உப்பு தயாரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
x

நவீன எந்திரம் மூலம் அயோடின் உப்பு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

நவீன எந்திரம் மூலம் அயோடின் உப்பு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

உணவு பாதுகாப்பு துறை சார்பில் உப்பு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உப்புத்துறை ஆணையர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் உப்பு உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள் உப்பு தொழிலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை விளக்கி பேசினர். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உன்னத தொழில்

தமிழகத்தின் ஒட்டு மொத்த உப்பு தேவையையும், இந்தியாவின் 11 சதவீதம் அளவுக்கு உப்பு தேவையை நிறைவேற்றி தரும் உப்பு உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ளனர். தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பு உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்வு காண வேண்டும் என்று சமூகநலத் துறை அமைச்சர், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், 7 மாவட்ட உப்பு உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசனை நடந்து உள்ளது. அயோடின் கலந்த உப்பு பாதுகாப்பானது என்று அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்களில் அயோடின் இல்லாத உப்பே சிறந்தது என்று பரப்பப்படுகிறது. இது போன்ற கருத்துக்களை மிகைப்படுத்துவது தவறானது. இதன் மூலம் மனித சமூகத்துக்கு ஏதோ ஒரு வகையில் தீங்கு இழைக்க தயாராகி கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். அயோடின் குறைவால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதில் இருந்து விலக்கு பெற நினைப்பது தவறான செயலாகி விடும். நீங்கள் உன்னதமான தொழிலை செய்து வருகின்றனர்.

காலனி

நீங்கள் லாப நோக்கம் பார்க்காமல், மக்களின் உணவுக்காக செய்யும் சேவை என்று மனதில் நிறுத்தி தொழில் செய்ய வேண்டும். உப்பளத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. உப்பளத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கம்பூட் எனப்படும் காலனி எடை அதிகமாக இருப்பதால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்று தொழிலாளர்கள் கூறினார்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்வதற்காக மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துறை சார்பில்கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்படும். உப்பள தொழிலாளர்களுக்கு மென்மையான, பாதிப்பு ஏற்படாத வகையில் காலனி தயாரிக்க கோரிக்கை விடுக்க உள்ளோம். பாதுகாப்பாகவும், எடை குறைவானதாகவும் காலனிகள் கண்டுபிடித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வழக்குகள் மிகப்பெரிய பாரம்தான். இதனை தள்ளுபடி செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன எந்திரம்

மேலும் 2 கிலோ உப்பு பாக்கெட் போடுவதற்கு பதிலாக ஒரு கிலோ உப்பு பாக்கெட் போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். உப்பு உற்பத்தியில் அதிநவீன எந்திரங்களை பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் நவீன அயோடின் கலக்கும் எந்திரம் தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இதனால் சிறு, குறு தொழில்நிறுவனங்களுடன் இணைந்து நீங்களே அதனை அமைப்பதற்கு அரசு உதவி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். ஆவாரம்பூ டீ குடித்து பார்த்தார். சத்தான உணவு பொருட்களையும் சாப்பிட்டு பார்த்தார். மேலும் செல்சினி காலனியில் உப்பள தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து முத்துகிருஷ்ணாபுரம் அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள உப்பளங்களுக்கு நேரடியாக சென்று உப்பள தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


Next Story