இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு


இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு
x

பரமத்தியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

ஆய்வு

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள், குடிநீர், சுகாதாரம் மற்றும் மின்சார வசதிகள் குறித்து முகாமில் உள்ளவர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் முகாம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 106 இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை மேம்படுத்தும் வகையில் சுமார் ரூ.316 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதனை செயல்படுத்தும் விதமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல்வேறு திட்டங்கள்

அனைத்து முகாம்களிலும் நகர்ப்புற கட்டமைப்புடன் கூடிய புதிய வீடுகள் கட்டித்தரப்படும். பள்ளி கல்லூரிகளில் பயிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மேல்நிலை வகுப்பு முடித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் வேளாண் பட்டப்படிப்புகளில் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மகளிர் அணி முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மருத்துவ உதவி தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

எருமப்பட்டி

இதேபோல் எருமப்பட்டி பேரூராட்சி கைகாட்டியில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாக சுமார் 27 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இலங்கை தமிழர்கள் குடியிருப்பு முகாமுக்கு சென்று ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது இந்த பகுதிக்கு தனியாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனவும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் அங்கிருந்த மக்கள் கோரிக்கை வைத்தனர். நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா மற்றும் பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, எருமப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல், பேரூராட்சி துணை தலைவர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story