திருப்பத்தூர், கள்ளக்குறிச்சியில் புதிதாக பால் ஒன்றியம் அமைக்கப்படும் நாமக்கல்லில் அமைச்சர் நாசர் பேட்டி


திருப்பத்தூர், கள்ளக்குறிச்சியில் புதிதாக பால் ஒன்றியம் அமைக்கப்படும்  நாமக்கல்லில் அமைச்சர் நாசர் பேட்டி
x

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் புதிதாக பால் ஒன்றியம் அமைக்கப்பட உள்ளதாக நாமக்கல்லில் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

நாமக்கல்

நாமக்கல்:

திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் புதிதாக பால் ஒன்றியம் அமைக்கப்பட உள்ளதாக நாமக்கல்லில் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

நியாயமான கோரிக்கை

நாமக்கல்லில் நேற்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாமக்கல்லில் புதிய பால் பண்ணையை நடைமுறைக்கு கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் புதிதாக பால் ஒன்றியம் அமைக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கு அடிக்கல் நாட்டப்படும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை தான். அதை வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது 42 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த ஆட்சியை விட விற்பனையும் அதிகரித்துள்ளது. 10, 15 நாட்களுக்கு மேல் தாமதிக்காமல் பால் பணம் வழங்கப்படுகிறது. நொடிந்த சங்கங்களுக்கு மானிய விலையில் தீவனம் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் தீபாவளியின்போது ரூ.53 கோடியாக இருந்த வியாபாரத்தை, ரூ.87 கோடியாக உயர முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஆண்டு ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயித்து திட்டப்பணிகளை தொடங்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள சுமார் 1,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 'ஹெல்த் மிக்ஸ்' என்ற பொருள் இன்னும் தயாரிக்கவே இல்லை. ஆய்வில் தான் உள்ளது. தானியங்கள் மற்றும் பாலை இணைத்து ஊட்டச்சத்தாக தயாரித்து ஒரு வயது முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தயாரிக்காத பொருளை எப்படி சுகாதாரத்துறை வாங்க முடியும்.

தன்னை முன்னிறுத்தி கொள்ள பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story