தருமபுரம் ஆதினத்துடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
தர்மபுரம் ஆதீன மடத்திற்குச் சென்ற அமைச்சர் சேகர்பாபுவிற்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை,
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆய்வுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை மயிலாடுதுறைக்கு வருகை தந்த அமைச்சர் சேகர்பாபு, அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.
இதனை தொடர்ந்து மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீன மடத்திற்குச் சென்ற அமைச்சர் சேகர்பாபுவிற்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து அவரிடம் அமைச்சர் சேகர்பாபு ஆசி பெற்றார். இந்த சந்திப்பின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையடுத்து அங்கு 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பட்டண பிரவேச நிகழ்ச்சிக்குப் பிறகு தருமபுரம் ஆதீனம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இடையிலான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.