முகையூர் ஒன்றியத்தில்கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்அமைச்சர் பொன்முடி ஆய்வு
முகையூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.
திருக்கோவிலூர்,
ஆய்வு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதி உள்ள நபர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் முகையூர் ஒன்றியத்துக்குட்பட்ட சென்னகுணம், ஆயந்தூர், ஆ.கூடலூர், ஆற்காடு, பரனூர் மற்றும் கொல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் விண்ணப்பப்பதிவு விபரங்களை கேட்டறிந்ததுடன் தகுதிவாய்ந்த நபர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும் என அறிவுரை கூறினார்.
சென்னகுணம் கிராமத்தில் நடைபெறும் முகாமை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் ஊழியரிடம், விண்ணப்பப்பதிவு விவரங்களை கேட்டார். அதற்கு அந்த பெண் ஊழியர் தவறான தகவல் தரவே, உடனிருந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம் தலையிட்டு சரியான தகவலை கூறினார்.
சிரிப்பலை
உடனே அமைச்சர் பொன்முடி அங்கிருந்த ஊழியர்களிடம் பணி செய்யும் போது கவனமாக செய்வதுடன் இங்கு வரும் பொது மக்களிடம் மலர்ந்த முகத்துடன் புன்னகையோடு கலந்து பேசி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என கூறி சிரித்தார். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரித்ததால் முகாமில் சிரிப்பலை எழுந்தது.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.க்கள் விக்கிரவாண்டி புகழேந்தி, விழுப்புரம் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கண்டாச்சிபுரம் ரவிச்சந்திரன், அரகண்டநல்லூர் அ.சா.ஏ.பிரபு, பிரேமா அல்போன்ஸ், திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆ.கூடலூர் ராஜீவ்காந்தி, முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், ராஜேந்திரன், நிர்வாகிகள் முருகையன், முருகதாஸ், சக்திசிவம், ஜெய்சங்கர், லூயிஸ், கோபால், சேகர், சத்யராஜ் மற்றும் பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.