நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர்கள் வருகை


நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர்கள் வருகை
x
தினத்தந்தி 17 July 2023 5:00 PM GMT (Updated: 17 July 2023 5:36 PM GMT)

சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் பொன்முடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. இந்தசூழலில் சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இருந்து 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 70 லட்ச ரூபாய் பணத்துடன், அமெரிக்க டாலர் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை அவரது வீட்டில் இருந்து அவரது காரில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் அசோக் இருவரும் அழைத்து செல்லப்பட்டு, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடியின் ஆடிட்டர்கள் தற்போது வருகை தந்துள்ளதாகவும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டின் முன்பு திமுக குவிந்து வருகின்றனர்.


Next Story