வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Sep 2023 10:15 PM GMT (Updated: 8 Sep 2023 10:16 PM GMT)

நீலகிரியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நான்சச் பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஆனைப்பள்ளம் சாலை, 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் செலவில் நெடுஞ்சாலைத்துறை பிரதான சாலை முதல் வெள்ளாளமட்டம் வரை முடிக்கப்பட்ட சிமெண்ட் சாலை என மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.23 கோடியில் முத்தநாடு ரோல் மட்டம் முதல் பவானி வரை, தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பனாட்டி பிரிவு முதல் இருட்டு சோலை வரை, கொலக்கொம்பை முதல் முத்தநாடு வரையிலும், ரூ.1.83 கோடி மதிப்பில் ட்ரூக் முதல் நான்சச் தேயிலை தொழிற்சாலை வரை சாலை மேம்பாட்டு பணிகள் என மொத்தம் ரூ.4.06 கோடி மதிப்பில் நடைபெற உள்ள பணிகளை தொடங்கி வைத்தார்.

அங்கன்வாடி மையம்

இதையடுத்து செங்கல்புதூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணியை ஆய்வு மேற்கொண்டார். மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தைமலையில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.91 லட்சம் செலவில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமரன், பேரூராட்சி தலைவர் ராதா, மேலூர் ஊராட்சி தலைவர் ரேணுகாதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story