பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு


பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 6 July 2023 9:15 PM GMT (Updated: 6 July 2023 9:16 PM GMT)

வால்பாறையில் பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் பேரிடர் மீட்பு படையினருடன் ஆலோசனை நடத்தினார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் பேரிடர் மீட்பு படையினருடன் ஆலோசனை நடத்தினார்.

தென்மேற்கு பருவமழை

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இங்கு கலெக்டர் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் மேற்பார்வையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறையினரும் தயார்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 100 பேர் வரவழைக்கப்பட்டு இருக்கின்றனர். இது தவிர அரசு கலைக்கல்லூரியில் 250 பேரை தங்க வைக்கும் வகையில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு உளளது.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் வால்பாறைக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நேற்று வந்தார். பின்னர் பேரிடர் மீட்பு படையினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் நிவாரண முகாமை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வாழைத்தோட்டம் ஆற்றுப்பகுதியையும், கூழாங்கல் ஆற்றுப்பகுதியையும் பார்வையிட்டார்.

ஆலோசனை

இதையடுத்து கலெக்டர் கிராந்திகுமார், பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, தாசில்தார் அருள்முருகன், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் பெர்ப்பெட்டிடெரன்ஸ்லியோன், தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் சுதாகர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தினார்.

சாலையில் விழுந்த மரங்கள்

அப்போது, எந்த சூழ்நிலையிலும் மழை வெள்ளத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் வால்பாறைக்கு வரும் வழியில் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். அப்போது வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள், தி.மு.க. நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்புகள்

முன்னதாக பொள்ளாச்சியில் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்ட 138 அடுக்குமாடி குடியிருப்புகள் மோசமாக உள்ளது. அதில் மிக மோசமான நிலையில் 60 குடியிருப்புகள் உள்ளது. அவற்றை இடித்து விட்டு புதிதாக குடியிருப்புகள் கட்டப்படும். மேலும் சுயநிதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்த்து நடவடிக்கை குழு அமைத்து பேச அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்ததாரர்களை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். அங்கு மோசமாக உள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்ட சட்ட விதிகளின்படி உதவி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story