வால்பாறை பகுதியில் விரைவில் மகளிருக்கான கட்டணமில்லா பஸ் வசதி-அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
வால்பாறை பகுதியில் விரைவில் மகளிருக்கான கட்டணமில்லா பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
வால்பாறை: வால்பாறை பகுதியில் விரைவில் மகளிருக்கான கட்டணமில்லா பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
வால்பாறை கோடைவிழா
வால்பாறையில் 3 நாட்கள் கோடைவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த கோடைவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, மலர்கண்காட்சியையும், அரசு துறைகளின் பல்வேறு அரங்குகளையும் பார்வையிட்டார்.
வளர்ச்சி பணிகள்
இதையடுத்து அவர், பல்வேறு துறைகளின் சார்பில் 111 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து 11 ஆயிரத்து 70 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.13 கோடியே 55 லட்சம் மதிப்பில் செய்து முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.16 கோடியே 75 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அத்துடன் 10 மற்றும் 12-ம் வகுப்பில் வால்பாறை அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். கோடைவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட போலீசாரின் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழச்சிகள் நடைபெற்றன.விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும்போது கூறியதாவது:-
85 சதவீதம் வாக்குறுதிகள்
கோவை மாவட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் இதயத்தில் இடம் பிடித்த மாவட்டம். இதனால் கோவையில் மெட்ரோ திட்டம், ஜவுளி தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற திட்டங்களை முதல்-அமைச்சர் தந்துள்ளார்.
அதேபோல் வால்பாறை பகுதி மக்களுக்கும் நலத்திட்டங்களை வழங்குவதற்கும் முதல்-மைச்சர் தயாராக உள்ளார். தமிழக திராவிட மாடல் ஆட்சியில் வால்பாறை நகராட்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. வால்பாறை பகுதியில் மகளிருக்கான கட்டணமில்லா பஸ் வசதி விரைவில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள், சுற்றுலா பயணிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலம் நன்றி கூறினார்.