வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி-தலைவர்கள் மரியாதை


வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி-தலைவர்கள் மரியாதை
x

கோவையில் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவர் இழுத்த செக்குக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி- தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவர் இழுத்த செக்குக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி- தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

வ.உ.சி. பிறந்த நாள் விழா

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அவரை கொடுமைப்படுத்தும் நோக்கில் செக்கு இழுக்க வைத்தனர். அவர் இழுத்த செக்கு அங்குள்ள சிறை வளாகத்தில் இன்றும் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழா, கோவை மத்திய சிறையில் நடைபெற்றது. இதையொட்டி வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவரது மார்பளவு சிலை, உருவப்படம் ஆகியவை வண்ண பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

அமைச்சர் மரியாதை

விழாவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை ஆணையாளர் ஷர்மிளா, கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், முன்னாள் எம்.பி. நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.சரத், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சங்க செயலாளர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.பி.வேலுமணி

இதேபோன்று அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பங்கேற்று வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன், மாநகர் மாவட்ட பொருளாளர் பார்த்திபன், சிங்கை முத்து, பகுதி செயலாளர்கள் காட்டூர் செல்வராஜ், ராஜ்குமார், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, நாம் தமிழர் கட்சி, இந்து மக்கள் கட்சி மற்றும் வ.உ.சி. பேரவை உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அதன் நிர்வாகிகள் பங்கேற்று வ.உ.சிதம்பரனாரின் உருவப்படம் மற்றும் அவர் இழுத்த செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அவர்கள் சிறைக்குள் ஊர்வலமாக கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.

இதுதவிர பொதுமக்களும் பலர் தங்கள் குழந்தைகளை வ.உ.சிதம்பரனாரின் வேடம் அணிந்து அழைத்து வந்து மரியாதை செலுத்தினர்.


Next Story