மலைக்காவலர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு திடீர் ஆய்வு
மலைக்காவலர் கோவிலில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர் பாபு திடீர் ஆய்வு செய்தார்.
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு-வேலூர் சாலையில் சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைக் காவலர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. விரைவில் இந்த புனரமைப்பு பணிகளை செய்து, கம்பாபிஷேக விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழமை வாய்ந்த இந்த கோவிலை சிறப்பாக புனரமைப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் கோவிலை சுற்றியும், கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு பகுதியையும் ஆய்வு மேற்கொண்டார். காலியாக உள்ள இடங்களில் பூங்கா அமைத்தும் பொதுமக்கள் பார்வையிடவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என்றால் கூடுதலாக நிதி ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளதாகவும், அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆய்வின்போது அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் உதவிஆணையர் ரமணி காந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.