40 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை கவுரவிக்கிறார் அமைச்சர் சேகர்பாபு - இந்து சமய அறநிலையத்துறை
விரதம் இருந்து இருமுடி கட்டி கடந்த 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை வருகிற 14-ந் தேதி அமைச்சர் பி.கே.சேகர்பாபு கவுரவிக்கிறார் என இந்துசமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.
சென்னை,
விரதம் இருந்து இருமுடி கட்டி கடந்த 40 ஆண்டுகளாக சபரி மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை வருகிற 14-ந் தேதி அமைச்சர் பி.கே.சேகர்பாபு கவுரவிக்க இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் அய்யப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இப்பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவில்கள் சார்பாக திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின், சென்னை மண்டல கோவில்கள் சார்பாக, சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், பசுமை வழிச்சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்கு, அய்யப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை சிறப்பு விழாவாக நடைபெற உள்ளது. இவ்விழாவில், அய்யப்பன் வரலாற்றை சித்தரிக்கும் நாடகத்தை வைஷ்ணவி குழுவினரும், அய்யப்பனைப் போற்றி பாடும் பஜனைகளை வீரமணி குழுவினரும் நடத்த உள்ளனர்.
அதைத்தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவாளர்கள் சுகி சிவம் மற்றும் தேசமங்கையர்க்கரசி ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவுகளுடன் பஞ்சவாத்திய முழக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, கடந்த 40 ஆண்டுகளாக விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்ட பக்தர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கவுரவித்து சிறப்பு செய்ய உள்ளார்.
இந்த விழாவில் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. த.வேலு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர், மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேலும், விழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதம் மற்றும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.