போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை


போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை
x
தினத்தந்தி 8 Jan 2024 3:43 PM IST (Updated: 8 Jan 2024 3:52 PM IST)
t-max-icont-min-icon

பேருந்துகளை சீராக இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன.

இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதையைடுத்து தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர் அதனால் பேருந்துகள் உறுதியாக இயங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசன நடத்தி வருகிறார். திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்த நிலையில், பேருந்துகளை சீராக இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள், காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர்.


Next Story