அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு


அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Aug 2023 8:30 PM GMT (Updated: 1 Aug 2023 8:30 PM GMT)

கிணத்துக்கடவு அருகே அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

அமைச்சர் ஆய்வு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் காளியண்ணன்புதூர் புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக அவரை பள்ளி தலைமை ஆசிரியர் அழகிமீனாள் வரவேற்றார். ஒவ்வொரு வகுப்பறையாக சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவ-மாணவிகளிடம் வாசிப்பு திறனை அறிந்து கொள்ள கலந்துரையாடினார். மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் நன்றாக படித்து, தங்களது வாழ்க்கைத்தரம் மேம்பட உழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

தரமான உணவு

இதையடுத்து அங்குள்ள சத்துணவு கூடத்திற்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்து தரமான உணவுகளை சுவையாக வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன்பின்னர் பள்ளி வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு சென்று அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று சுத்தமாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார். மேலும் பள்ளி ஆசிரியர்களிடம் தங்களுக்கு என்ன தேவைகள் உள்ளது? என்பது குறித்து கேட்டறிந்தார்.

பஸ் வசதி

அப்போது மாணவ-மாணவிகளுக்கு மாலை நேரத்தில் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லை என்று ஆசிரியர்கள் கூறினர். அதற்கு, போக்குவரத்துத்துறை அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்தார்.

முன்னதாக அவருடன், பள்ளி ஆசிரியர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


Next Story