வளர்ச்சிப்பணி திட்டங்களை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


வளர்ச்சிப்பணி திட்டங்களை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

சென்னை

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பங்காரு தெருவில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.2.47 கோடி மதிப்பில் 9 ஆயிரத்து 100 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 3 தளத்துடன் கூடிய சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட உள்ளதை முன்னிட்டு அந்த இடத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, வார்டு 115-க்கு உட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் மாநில மேலாண்மை பேரிடர் நிதியின் கீழ் ரூ.1.67 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், டாக்டர் பெசன்ட் சாலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.1.05 கோடி மதிப்பில் 4 ஆயிரத்து 656 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த திறன் மற்றும் விளையாட்டு மையத்தின் கட்டிடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பணியை தரமாகவும் விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, லாயிட்ஸ் காலனியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.7.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையக் கட்டிடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story