ஆவடியில் தி.மு.க இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


ஆவடியில் தி.மு.க இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

ஆவடியில் நடந்த தி.மு.க இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு வகுக்கும் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் லட்சியம் என பேசினார்.

திருவள்ளூர்

ஆவடி,

ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று மாலை ஆவடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான சா.மு. நாசர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் டிசம்பர் 17-ல் நடைபெற இருக்கும் தி.மு.க மாநாட்டிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் சா.மு. நாசர் ரூ.1 கோடி 50 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

அதேபோல் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி சந்திரன் எம்.எல்.ஏ. ரூ.1 கோடி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ரூ.1 கோடி நிதி ஆகியோர் வழங்கினர்.

இந்த கூட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் போது, 'இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டத்தில் உண்மையான முதல் செயல் வீரன் ஆவடி நாசர். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டுகிறது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் 31,000 அரசு பள்ளிகளில் செயல்படுகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் பயனடைகின்றனர். அந்த திட்டத்தில் நானும் ஒரு முக்கிய பயனாளி தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் முதல் வேலை காலை 8 மணிக்கு பள்ளியில் உட்கார்ந்து பிள்ளைகளோடு சாப்பிடுவது தான். இதுதான் திராவிட மாடல் அரசு.

இன்னொரு திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். சிறந்த எடுத்துக்காட்டு திராவிட மடல் அரசு என்பது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அரசு வகுக்கும் திட்டங்கள் ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் லட்சியம்' என பேசினார்.


Next Story