மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பிலான பொருட்களை வாங்குவதற்கு மதி சந்தை விற்பனை இணையதளம்


மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பிலான பொருட்களை வாங்குவதற்கு மதி சந்தை விற்பனை இணையதளம்
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மதி சந்தை விற்பனை இணையதளத்தையும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மாத இதழ் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழுவில் இடம் பெற்று இருப்பவர்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் மாநில, மாவட்டம் மற்றும் வட்டார அளவில் விற்பனை கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.

அதன் தொடர்ச்சியாக ஊரக உள்ளாட்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பிலான பொருட்கள் மக்கள் மத்தியில் சென்றடையும் வகையில் மதி சந்தை விற்பனை இணையதளம் (https://www.mathisandhai.com) அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த இணையதளத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மதி சந்தை விற்பனை இணையதளத்தையும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மாத இதழ் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பிலான உணவு, ஜவுளி மற்றும் இயற்கையை பாதிக்காத பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடிய மதி அனுபவ அங்காடியையும் திறந்து வைத்தார். அங்காடியை சுற்றிப்பார்த்த அவர், இறுதியாக பணம் கொடுத்து உணவுப் பொருள் ஒன்றை வாங்கி, விற்பனையையும் தொடங்கி வைத்தார். இந்த மதி அனுபவ அங்காடியில் சுய உதவிக் குழு மகளிரால் நடத்தப்படும் 'மதி கபே' என்ற சிற்றுண்டி உணவகமும் அமைந்துள்ளது.


Next Story