அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும்
சனாதனம் குறித்து பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்
கோவை
சனாதனம் குறித்து பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமருக்கு நன்றி
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நமது நாடு வேகமாக முன்னேற இந்த இடஒதுக்கீடு முதல்படி. இதனை அனைத்து பெண்களும் கொண்டாட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடு முன்னேற்றம் அடைந்து உள்ளது. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது சரியல்ல.
உயர்கல்வி மருத்துவ படிப்பில் 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கிறது. இதற்காக நீட் தேர்வில் ஜீரோ சதவீதம் என்பது இந்த ஆண்டுக்கான காலியிடங்களை நிரப்ப மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை வைத்து நீட் தேர்வு தேவையில்லை என்பது தவறு. மருத்துவ உயர்கல்வியை சீரமைக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
கண்டிக்கத்தக்கது
இதில் கவுன்சிலிங் செல்லும்போது தகுதியான மருத்துவர்களுக்குதான் வாய்ப்பு கிடைக்கும். இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் பயனடையும் என்பது சரியல்ல. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் பலனடையும். இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.
சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் ஏன் மத, சாதி வேறுபாடுகளை பற்றி பேசுகிறார்கள். இந்துக்கள் படிக்க மற்றவர்கள்தான் காரணம் என்று சபாநாயகர் கூறுவது நியாயமா? அதுபற்றி நீங்கள்தான் பதில் கூற வேண்டும். அப்படி அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.
சட்டரீதியாக சந்திக்க வேண்டும்
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வழக்கை சட்டரீதியாக சந்தித்துதான் ஆக வேண்டும். நாடாளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி. பேசியது தவறுதான். இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தும்போது அவர் அழைக்கப்படுவார். இப்போது ஜனாதிபதிக்கு ஆதரவாக பேசுபவர்கள், அவர் போட்டியிட்டபோது ஏன் ஆதரிக்கவில்லை. அவரை ஜனாதிபதியாக தேர்வு செய்ததற்கு பிரதமர்தான் முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.