5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி வருகை-முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு


5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி வருகை-முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 2 March 2023 6:45 PM GMT (Updated: 2 March 2023 6:46 PM GMT)

வருகிற 5-ந் தேதி கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

சிவகங்கை

திருப்புவனம்

வருகிற 5-ந் தேதி கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி அருங்காட்சிய கத்தில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் முயற்சியால் வரலாற்று சிறப்பு அம்சங்களை வெளிக்கொணரும் வகையிலும், சங்க காலத்தில் தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதையும், குறிப்பாக எழுத்தறிவு மிக்கவர்களாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதையும், இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக அளவில் தமிழன் புகழை பறைசாற்றி பெருமை சேர்த்து வருகிறார்.

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள் கொண்ட மாவட்டமாக திகழ்ந்து வரும் சிவகங்கை மாவட்டத்தில் சங்ககால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்கின்ற வகையில் அகழாய்வு பணிகள் 8 கட்டமாக கீழடி பகுதியில் நடைபெற்றது.

முன்னேற்பாடு பணிகள்

மேற்கண்ட பணிகளின் போது கிடைக்கப்பெற்ற நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அதன் பெருமையை உலக அளவில் பறைசாற்றுகின்ற வகையிலும், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.18.42 கோடியில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் கட்டப்பட்டு தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு பணிகளும் நடைபெற்று வருகிறது.

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தமிழர்களின் வரலாற்று பக்கங்களில் சிவகங்கை மாவட்டத்தை மேலும் பெருமை சேர்க்கின்ற வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தினை, முதல்-அமைச்சர் வருகிற 5-ந் தேதி நேரடியாக வந்து திறந்து வைக்க உள்ளார். முதல்-அமைச்சர் வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையாளர் (பொறுப்பு) சிவானந்தம், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திருப்புவனம் யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story