உளுந்தூர்பேட்டை, விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ்கூவாகம் அழகிப்போட்டி


உளுந்தூர்பேட்டை, விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ்கூவாகம் அழகிப்போட்டி
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:45 PM GMT)

உளுந்தூர்பேட்டை, விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான மிஸ்கூவாகம் அழகிப்போட்டி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு கலந்து கொள்ளும் திருநங்கைகளுக்கு இடையே மிஸ்கூவாகம் என்னும் அழகி போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை நடத்தியது.

தற்போது கூவாகம் கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லையில் வருவதால், அழகிப்போட்டியில் முதல் 2 சுற்றுக்களை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலும், இறுதி சுற்று போட்டியை விழுப்புரத்திலும் நடத்த ஏற்பாடு செய்தனர்.

உளுந்தூர்பேட்டையில்...

அதன்படி அழகிப்போட்டியின் முதல் சுற்று, 2-ம் சுற்று தேர்வு போட்டிகள் நேற்று காலை உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின்ரோட்டில் உள்ள சக்கரவர்த்தி லலிதா மகாலில் நடைபெற்றது.

இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் மணிக்கண்ணன், உதயசூரியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு செயலாளர் கங்கா, பொருளாளர் சோனியா, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் சுசீலா, சிந்து ஆகியோர் வரவேற்றனர்.

அழகிப்போட்டி

இதை தொடர்ந்து காலை 11.30 மணியளவில் மிஸ் கூவாகம்-2023 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 46 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 16 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும், மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்கள் 16 பேரும் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story