திண்டிவனத்தில் 600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தல்: சேற்றில் சிக்கியதால் லாரியை மர்மநபர்கள் விட்டுச்சென்றனர்


திண்டிவனத்தில் 600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தல்: சேற்றில் சிக்கியதால் லாரியை மர்மநபர்கள் விட்டுச்சென்றனர்
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் 600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தப்பட்டது. அந்த லாரி சேற்றில் சிக்கியதால் அதை மர்மநபர்கள் விட்டுச்சென்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரெயிலில் எடுத்து வரப்பட்ட 30 டன் அளவுள்ள தலா 50 கிலோ எடை கொண்ட 600 மூட்டை ரேஷன் அரிசிகளை நேற்று முன்தினம் இரவு லாரியில் ஏற்றி திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதற்குள் இருள் சூழ்ந்ததால் ரேஷன் அரிசியுடன் லாரியை அதன் டிரைவரான திண்டிவனம் உதயா நகரை சேர்ந்த சையது சுல்பிக்கான்அலி (வயது 44) நுகர்பொருள் வாணிபக் கழக குடோனுக்கு வெளியே நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது, ரேஷன் அரிசியுடன் லாரியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் சையது சுல் பிக்கான் அலி இதுகுறித்து லாரி உரிமையாளர் தனக்கோட்டியிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ்.கருவியை சோதனை செய்தபோது, லாரி மேல்பேரடிக்குப்பம் மெயின் ரோடு பகுதியில் இருப்பது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து ரோஷனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரோஷனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது லாரி சேற்றில் சிக்கி இருந்தது. அதில் 88 மூட்டை ரேஷன் அரிசி மட்டும் இருந்தது. மீதமுள்ள 512 மூட்டை ரேஷன் அரிசிகளை காணவில்லை.

போலீசார் நடத்திய விசாரணையில், திண்டிவனம், சந்தைமேடு பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து லாரியுடன் ரேஷன் அரிசியை கடத்திய மர்மநபர்கள், மேல்பேரடிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு காலி மனையில் லாரியை நிறுத்தி உள்ளனர். பின்னர் அந்த லாரியில் இருந்த 512 மூட்டை ரேஷன் அரிசிகளை மாற்று லாரிகளில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

மீதமுள்ள 88 மூட்டை ரேஷன் அரிசியுடன் செஞ்சி நோக்கி சென்ற லாரி சேற்றில் சிக்கியது. இதனால் அந்த 88 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியை அங்கேயே விட்டு விட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 88 மூட்டை ரேஷன் அரிசியுடன் நின்றிருந்த லாரியை மீட்டு ரோஷனை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story