20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபர்மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்தார்


20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நபர்மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்தார்
x

திருப்பூரில் காணாமல் போன நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தினருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர்

திருப்பூரில் காணாமல் போன நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தினருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு மாயம்

கேரள மாநிலம் மூணாறு அருகே மறையூரை சேர்ந்தவர் செல்வலட்சுமி (வயது 47). இவரது கணவர் திருப்பூரை சேர்ந்த வெங்கடாசலம் (55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாசலம் தனது மனைவி, 2 மகள்களுடன் திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தார்.

அப்போது வெங்கடாசலம் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் திடீரென காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

சுயநினைவு திரும்பியது

இதன் பின்னர் செல்வலட்சுமி கஷ்டப்பட்டு உழைத்து தனது 2 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பத்தனாபுரத்தில் செயல்பட்டு வரும் காந்திபவன் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் திருப்பூர் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தனர்.

அப்போது, திருப்பூரைச் சேர்ந்த வெங்கடாசலம் தற்போது தங்களது தொண்டு நிறுவனத்தில் இருப்பதாகவும், அவருக்கு 20 ஆண்டுகளாக தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவர் மனநல பாதிப்பில் இருந்து மீண்டு சுயநினைவு திரும்பிவிட்டதாகவும், அவர் திருப்பூர் சமத்துவபுரத்தில் உள்ள குடும்பத்தினரின் விவரங்களை கூறியதுடன், அவர் குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

உறுதி செய்தனர்

மேலும் வெங்கடாசலத்தின் புகைப்படத்தை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் உத்திரகுமார் வெங்கடாசலம் புகைப்படத்தை வைத்துக் கொண்டு சமத்துவபுரம் சுற்று வட்டாரத்தில் செல்வலட்சுமி யார் என்று தேடி அலைந்தார்.

பின்னர் ஒரு வழியாக அப்பகுதி மக்கள் உதவியுடன் செல்வலட்சுமியை கண்டுபிடித்து வெங்கடாசலத்தின் புகைப்படத்தை செல்வலட்சுமியிடம் காண்பித்தார். அப்போது அது தனது கணவர்தான் என்பதை செல்வலட்சுமி உறுதி செய்தார்.

திருப்பூர் வந்தார்

இதனை தொடர்ந்து காந்திபவன் அறக்கட்டளை நிர்வாகிகள் வினோத்குமார், ஜார்ஜ் ஆகியோர் நேற்று காலை ரெயில் மூலம் வெங்கடாசலத்தை கேரளாவில் இருந்து திருப்பூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் முன்னிலையில் வெங்கடாசலத்தை, அவருடைய மனைவி செல்வலட்சுமியிடம் ஒப்படைத்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், தனலட்சுமி, முதன்மை காவலர் மனோகரன், உத்திரகுமார் உள்பட போலீசார் உடன் இருந்தனர்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கடாசலத்தை அவரது மனைவி செல்வலட்சுமியும், அவரது மகள்களும் பார்த்து கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது.

1 More update

Related Tags :
Next Story