வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு; உறவினர்கள் மறியல்


வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு; உறவினர்கள் மறியல்
x

வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரிமேட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு தேவிகா (வயது 16), விக்னேஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்த தேவிகா நள்ளிரவில் காணவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை தேவிகா ஊருக்கு அருகாமையில் உள்ள குஞ்சப்பன் என்பவரது விவசாய பாசன கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதையடுத்து குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, தேவிகாவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தேவிகாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அரங்கு முன்பு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அப்போது தேவிகாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேவிகாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டு மறியலை விலக்கி கொண்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story