சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்


சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்
x

மாநாட்டில் பங்கேற்பதற்காக 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் நோக்கில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மாநாட்டின் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.

மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. உற்பத்தி தொடர்பான கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் தொழில் துறை அரங்குகளும் இடம் பெறுகின்றன. 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர்.

சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்கின்றன. 35 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு கருத்தரங்கில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

மாநாட்டின்போது நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன் ரூ.5.5 லட்சம் கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்க்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக 7 ஆயிரம் கோடி ருபாய் முதலீட்டில் ஐ-போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். ஐ-போனை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முதல் இந்திய நிறுவனமாக கடந்த நவம்பர் மாதம் டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது ஓசூரில் ஐ-போன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக 7 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய யூனிட் அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.


Next Story