கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம்


கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம்
x

தமிழகம் முழுவதும் கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்படும் என நலவாரிய தலைவர் பொன்.குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் கல் உடைக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்தும், நல வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு கல் உடைக்கும் தொழிலாளர்களிடம் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு நல வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் பொன்.குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கல் குவாரிகளில் கல் உடைக்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். கற்களை உடைக்கிற பொழுது கண் பாதிப்பு, தோல் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் உண்டாகிறது. இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல் உடைக்கும் தொழிலாளர்களும் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். நலவாரியத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், டயாலிசிஸ் செய்து வருபவர்கள், "சிலிகோசிஸ்" போன்ற தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000, வழங்கக்கூடிய திட்டம் வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பயன்களை தொழிலாளர்கள் பெற்று கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் மருத்துவ பரிசோதனைக்காக நாளை (புதன்கிழமை), அன்று நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம், முதன், முதலாக பெரம்பலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ் பெரம்பலூர் மாவட்டத்தில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும், என்றார். அப்போது சங்கத்தின் பெரம்பலூர் தெற்கு மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story