'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு மாதிரி தேர்வு
‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு மாதிரி தேர்வு நடந்தது.
சிறப்பு பயிற்சி வகுப்பு
மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு எழுத தமிழக அரசின் பள்ளக்கல்வித்துறை மூலம் அந்தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாட்டில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாதிரி தேர்வு
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்தவர்களில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 106 பேருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி முதல் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டது.
பின்னர் அவர்களுக்கு கடந்த மாதம் 4-ந்தேதி முதல் தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையை தவிர்த்து தினமும் காலை முதல் மாலை வரை சிறப்பு பயிற்சி வகுப்பு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் கற்பித்து வந்தனர்.
70 பேர் எழுதினர்
இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி 'நீட்' தேர்வு நடைபெறுவதால், நேற்று அந்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 7 மாணவர்களும், 63 மாணவிகளும் என மொத்தம் 70 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 'நீட்' தேர்வில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர். விடைத்தாள், ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு 180 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் வழங்கப்பட்டன.
கேள்வித்தாளை வாங்கிய மாணவ-மாணவிகள் ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதிலை குறிக்க ஆரம்பித்தனர். காலையில் 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. மதியத்துக்கு பிறகு ஆசிரியர்களால் விடைத்தாள் திருத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இதுவரை 16 பேர்...
'நீட்' மாதிரி தேர்வினை எழுதியதால், வருகிற 7-ந்தேதி மத்திய அரசால் நடத்தப்படவுள்ள 'நீட்' தேர்வை பயமில்லாமல் எழுதலாம் என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று 'நீட்' தேர்வுக்கு சிறப்பு வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளில், கடந்த 2020-ம் ஆண்டில் 6 பேருக்கும், கடந்த 2021-ம் ஆண்டும், கடந்த ஆண்டும் தலா 5 பேருக்கும் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயில வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.