உக்கடம் பெரியகுளத்தில் நவீன சொகுசு படகு

உக்கடம் பெரிய குளத்தில் சவாரி செய்வதற்காக நவீன சொகுசு படகு குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது
உக்கடம் பெரிய குளத்தில் சவாரி செய்வதற்காக நவீன சொகுசு படகு குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.
நவீன சொகுசு படகு
கோவை வாலாங்குளத்தில் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி தொடங்கப்பட உள்ளது. இதற்காக அங்கு வாட்டர் சைக்கிள் படகு, பெடல் படகு, அதிவேகமாக செல்லும் மோட்டார் படகுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
அதன் தொடர்ச்சியாக உக்கடம் பெரிய குளத்திலும் படகு சவாரி விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக குஜராத்தில் இருந்து நவீன சொகுசு படகு ஒன்று நேற்று லாரி மூலம் கோவை உக்கடம் பெரிய குளத்தின் கரைக்கு கொண்டுவரப்பட்டது.
அந்த படகுடன் சேர்த்து பிளாஸ்டிக்கால் ஆன 3 வீல்கள் கொண்டு 2 பெரிய சைக்கிள் பெடல் படகுகள், 2 துடுப்பு படகுகளும் கொண்டு வரப்பட்டன.
குளத்தில் விடப்பட்டது
இதுதவிர கடந்த வாரம் 2 ஸ்கூட்டர் படகுகள் கொண்டு வரப் பட்டு உள்ளன. இந்த நவீன சொகுசு படகை குளத்தில் விடுவதற் கான பணிகள் நேற்று மதியம் கிரேன் உதவியுடன் நடைபெற்றது.
அப்போது குளத்துக்குள் சொகுசு படகு சென்றதும் அதை ஸ்கூட்டர் படகு கயிறு மூலம் கட்டி இழுத்துக் கொண்டு படகு நிறுத்தும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
குஜராத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு அதி நவீன பிரமாண்ட சொகுசு படகில் 12 பேர் வரை பயணம் செய்யலாம். அதிநவீன படகின் பின்பகுதியில் ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்ட பெட்ரோலில் ஓடும் எஞ்சின் உள்ளது.
தண்ணீரில் மிதக்கும் வகையில் படகின் இருபுறமும் பெரிய இரும்பு தகரத்தால் ஆன மிதவை பொருத்தப்பட்டு உள்ளது. படகின் செயல்பாடுகளை கணினி மூலம் கண்காணிக்க முடியும். இது, தமிழகத்தில் முதல் முறையாக கோவைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
துடுப்பு, ஸ்கூட்டர் படகு
மேலும் 2 துடுப்பு படகுகளும் கொண்டு வரப்பட்டு உள்ளது. அத்துடன் 3 சக்கரங்களை கொண்ட ராட்சத சைக்கிள் போன்ற போட்டும் வந்து இறங்கியது. அதிவேகமாக செல்லும் 2 ஸ்கூட்டர் படகுகளும் கொண்டு வரப்பட்டு உள்ளன.
ஒரு ஸ்கூட்டர் படகு நேற்று சோதனை நடத்தப்பட்டது. அது தண்ணீரை பீய்ச்சியடித்து கொண்டு சென்றது பார்க்க ரம்மியமாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






