தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது: அர்ஜூன் சம்பத்


தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது: அர்ஜூன் சம்பத்
x

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 2 லட்சம் தொண்டர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.

வேலூர்,

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு முன்பு ஆதரவாக வாக்களித்துவிட்டு தற்போது வரலாற்று பிழை என்று எதிராக பேசுகிறார். இது திராவிட கலாசாரம். தஞ்சை பெரிய கோவிலில் நாட்டியாஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்து விரோத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.

பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு அலை தமிழகத்தில் வீசுகிறது. இந்த அலை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக முதல் அமைச்சர் குடியுரிமை திருத்த சட்டம் பிரிவினையை உருவாக்கும் என கூறுகிறார். இந்த சட்டத்தால் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை.

புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் தெரிவித்துள்ள கருத்தை பார்க்கும்போது, அவர் அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல் பேசுகிறார். அவரது அறிக்கைக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மதத்தை சேர்ந்த நிறுவனங்கள் விஜய்க்கு பின்னால் இருந்து கொண்டு தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேரந்த தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் கடந்த 5 ஆண்டுகளும் பிரதமர் நரேந்திரமோடியை எதிர்த்து பேசுவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்தனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏதும் பேசவில்லை. தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 2 லட்சம் தொண்டர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர்" என்றார்.


Next Story