பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி பணம் மோசடி-தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
தர்மபுரி:
பாலக்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணம் மோசடி
தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி. ரோடு உழவர் சந்தை அருகே நிதி நிறுவனம் நடத்தப்பட்டு வந்தது. அந்த நிதி நிறுவனத்தில் வைப்புத்தொகை, மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் சிறு சேமிப்பு திட்டம் ஆகியவைகளை நடத்தி பணம் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணை
இந்த வழக்கு தற்போது தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே நிதி நிறுவனத்தில் மாதாந்திர ஏல சீட்டு, வைப்புத் தொகை மற்றும் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் உடனடியாக தர்மபுரி ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.