தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 லட்சம் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார்
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 லட்சம் மோசடி செய்தவா் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனா்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கரும்பூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் அருகே பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் மாதந்தோறும் ரூ.700-ஐ வசூலித்தார். இதில் எங்கள் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்களிடம் சீட்டுப்பணம் பெற்று அந்த பணத்தின் மூலம் எந்த பொருட்களும் வழங்காமல் செல்வம் ஏமாற்றி வந்தார். இதுபற்றி நாங்கள், புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அதன்பேரில் சீட்டு பணத்திற்கான பொருளை கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தந்து விடுவதாக செல்வம் உறுதியளித்தார். ஆனால் அவர், சீட்டுப்பணத்திற்கான பொருளை தராமல் ஏமாற்றி வருகிறார். இவ்வாறாக அவர் பலரிடம் இதுபோன்று பணம் வசூலித்து ரூ.3 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே செல்வத்தை விழுப்புரம் மாவட்ட போலீசார் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.