போலீஸ் என பெண்ணிடம் பணமோசடி; வாலிபர் கைது
பாம்பனில் போலீஸ் என கூறி பெண்ணிடம் பணமோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் (வயது 22). இவர் ஏற்கனவே கடந்த 2019, 2020-ம் ஆண்டு பகுதியில் பிரண்ட்ஸ் ஆப் போலீசில் சேர்ந்து பணியாற்றினார். அப்போது இவர் மீது பல்வேறு புகார் வரவே பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே பாம்பன் தெற்குவாடி பகுதியில் வசித்து வரும் மீனவ பெண் தேவி என்பவரை சந்தித்து தான் போலீசாக பணிபுரிந்து வருவதாகவும், தன்னிடம் திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் உள்ளதாகவும் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் இருசக்கர வாகனம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதை நம்பி இவரிடம் மீனவபெண் ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட இவர் இருசக்கர வாகனம் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் பாம்பன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் என ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த ஷியாமை போலீசார் கைது செய்தனர்.