மகளிர் சுயஉதவிக்குழுவில் பணம் மோசடி; கலெக்டரிடம் பெண்கள் மனு


மகளிர் சுயஉதவிக்குழுவில் பணம் மோசடி; கலெக்டரிடம் பெண்கள் மனு
x

நெல்லையில் மகளிர் சுய உதவிக்குழுவில் பண மோசடி நடந்ததாக கலெக்டரிடம் பெண்கள் மனு அளித்தனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லையில் மகளிர் சுய உதவிக்குழுவில் பண மோசடி நடந்ததாக கலெக்டரிடம் பெண்கள் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நெல்லை ராமையன்பட்டி வெண்ணிலா மகளிர் சுய உதவிக்குழு தலைவி வெள்ளத்தாய், துணைத்தலைவி இந்திரா மற்றும் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''மகளிர் சுய உதவிக்குழுவுக்கு வாங்கிய ரூ.3 லட்சம் கடனை தவணை தவறாமல் வங்கியில் செலுத்தி உள்ளோம். ஆனால் அந்த தொகையை வங்கி முகவர் முறையாக வங்கியில் செலுத்தாமல் ஏமாற்றி உள்ளார். எனவே எங்களது வங்கி பாஸ்புத்தகத்தை மீட்டு தர வேண்டும். புதிய கடன்தொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணத்தை நாங்கள் எடுக்க வங்கி தடை செய்யாமல் இருக்க உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர்.

குடிசைமாற்று வாரிய வீடு

இந்து திராவிட மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம் என்ற கோவை ரமேஷ் தலைமையில், அம்பை பகுதி மக்கள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''தமிழ்நாடு நகர்ப்புற குடிசைமாற்று வாரியம் மூலமாக அம்பை, விக்கிரமசிங்கபுரத்தில் பொதுமக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்ய ரூ.1.44 லட்சம் வாங்கினார்கள். 2019-20ம் ஆண்டில் 150 வீடுகளுக்கு தலா ரூ.1.44 லட்சம் வங்கி வரைவோலை மூலம் வசூலிக்கப்பட்டது. தற்போது குடிசை மாற்று வாரியம் ரூ.1.13 லட்சம் என நிர்ணயம் செய்துள்ளது. எனவே மீதமுள்ள தலா ரூ.31 ஆயிரத்தை திருப்பித் தர வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும். 450 வீடுகளும், பல்வேறு அரசு அலுவலகங்களும் இருக்கும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கட்டுமான தொழிலாளர்கள்

அனைத்து கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் முருகன் தலைமையில் தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், ''கொரோனா பரவலால் கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சரியான வேலைகள் கிடைக்கவில்லை. தற்போது கட்டிட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தால், கல்குவாரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து கட்டுமான பொருட்கள் வாங்கி வேலை செய்ய முடியவில்லை. எனவே தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், விபத்து நடந்த குவாரிகள் தவிர மற்ற கல்குவாரிகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்க வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.

சமுதாய நலக்கூடம்

சங்கர்நகர் பகுதியை சேர்ந்த வீட்டு வசதிய வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், ''எங்கள் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் ஓராண்டாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படவில்லை. எனவே அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர்.


Next Story