ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு பெண்ணிடம் ஒப்படைப்பு


ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு பெண்ணிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 19 July 2023 9:52 AM GMT (Updated: 19 July 2023 10:21 AM GMT)

பரிசுப்பொருள் வழங்குவதாக கூறி பெண்ணிடம் மர்மநபர்கள் ஆன்லைனில் மோசடி செய்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை

பரிசுப்பொருள் வழங்குவதாக கூறி பெண்ணிடம் மர்மநபர்கள் ஆன்லைனில் மோசடி செய்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

செங்கம் தாலுகா செல்வநாயகன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதிகா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கிராமத்தில் வாகனம் மூலம் ஊதுவர்த்தி விற்பனை செய்தவர்களிடம் ரூ.20 கொடுத்து ஊதுவர்த்தி வாங்கி உள்ளார். பின்னர் ஊதுவர்த்தி வாங்கியவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என கூறி பரிசு கூப்பன் ஒன்றையும் வழங்கி ராதிகாவிடம் செல்போனை பெற்று உள்ளனர்.

சில தினங்கள் கழித்து ராதிகாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அந்த நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும், பரிசு பொருட்களை பெற தாங்கள் வரி பணம் ரூ.4 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அதனை நம்பிய ராதிகா ரூ.4 ஆயிரத்து 600-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி உள்ளார். ஆனால் பரிசு பொருட்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தனது பணத்தை அவர்கள் மோசடி செய்ததை உணர்ந்த ராதிகா அதனை மீட்டுக் கொடுக்குமாறு சைபர் கிரைம் சேவை எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

அவரது புகார் குறித்து சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி ராதிகா ஆன்லைன் மூலம் இழந்த ரூ.4,600-ஐ மீட்டனர். பின்னர் அதனை அவரிடம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.


Next Story