ரோட்டில் கிடந்த பணம் போலீசில் ஒப்படைப்பு


ரோட்டில் கிடந்த பணம் போலீசில் ஒப்படைப்பு
x

ரோட்டில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

திருவாரூர்
திருவாரூர் அருகே உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் கணினி உதவியாளராக மோகன்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வங்கிக்கு சொந்தமான ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து திருவாரூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அவர், கமலாலயம் மேல்கரை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணப்பை தவறி கீழே விழுந்தது. இதனை அறியாத மோகன்ராஜ் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த பணப்பையை காணாமல் திடுக்கிட்டார்.

போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

இந்தநிலையில் ரோட்டில் கிடந்த ரூ.3¾ லட்சத்தை அந்த வழியாக சென்ற பேக்கரி உரிமையாளர் சத்யநாராயணன் எடுத்து அதனை தான் வைத்துக் கொள்ளாமல் தனது நண்பர் தண்டலை ஊராட்சி மன்ற உறுப்பினர் தியாகராஜன் உதவியுடன் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை போலீசார் சரிபார்த்து ரூ.3¾ லட்சத்தை கூட்டுறவு வங்கி செயலாளர் விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனர். ரோட்டில் கிடந்த பணத்தை எடுத்து போலீசில் ஒப்படைத்த பேக்கிரி உரிமையாளர் சத்யநாராயணனின் நேர்மையை வங்கி அதிகாரி மற்றும் போலீசார், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.






Next Story